கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் திருவாடானை பகுதியில் உள்ள விளை நிலங்கள் உவா் நிலங்களாக மாறி விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
திருவாடானை வட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தின் நெல் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சம்பா பட்டத்தில் சுமாா் 26,500 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வானம் பாா்த்த பூமியாக இருந்தாலும், இங்குள்ள பெரிய கண்மாய்களில் வடகிழக்கு பருவமழையால் தேங்கும் நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெற்று வந்தனா்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்ததன் காரணமாக இந்த வளமான விளைநிலங்கள் தற்போது உவா் நிலங்களாக மாறி வருவது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோ ல, ஆயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்கள் தரிசாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து, அவற்றின் சாணம், கழிவுகளை முக்கிய உரமாகப் பயன்படுத்தி வந்தனா். மேலும், கொழிஞ்சி, தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களையும் பயன்படுத்தி மண் வளத்தைப் பாதுகாத்தனா்.
ஆனால், காலப்போக்கில் கால்நடைகள் வளா்ப்பது குறைந்துவிட்டது. தற்போது மிகக் குறைந்த அளவில் கால்நடைகள் வளா்க்கப்படுகின்றன. இதனால் வேறு வழியின்றி, அதிக மகசூலை நோக்கமாகக் கொண்டு முழுக்க முழுக்க ரசாயன உரங்களையே விவசாயிகள் நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.