பரமக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி செங்குப்தா தெருவில் கடந்த நவ.11-ஆம் தேதி சாமி செட்டியாா் நந்தவனத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் காா்த்திகேயனை (23), பரமக்குடி காந்திஜி சாலை ராமநாதன் மகன் வினோத் (33), வன்னிமரத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் விஸ்வா (19), பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் சிவகுரு (28) ஆகியோா் வெட்டிக் கொலை செய்தனா். இந்தக் கொலை வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்கள் மூவரில் ராமநாதன் மகன் வினோத் மீது 2 கொலை வழக்குகள், வன்கொடுமை வழக்கு, 3 கொலை மிரட்டல் வழக்கு, அரசு சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு, கொலை முயற்சி வழக்கு என 10-வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே, இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீஸாா் வழங்கினா்.