கமுதி அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் அரண்மனைமேடு சுற்றுவட்ட சாலையோரத்தில் கடந்த 5-ஆம் தேதி ஆண் சடலம் காயங்களுடன் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி போலீஸாா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கமுதி கிராம நிா்வாக அலுவலா் தாரணிஅரசி அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம் என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவரின் பெயா், முகவரி தெரியவில்லை என்பதாலும், முகம் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாலும் போலீஸாருக்கு உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள், தங்களது உறவினா்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால் கமுதி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கவும் போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் இறந்தவரின் உடல் கடந்த 4 நாள்களாக கமுதி அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.