ராமேசுவரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞா், காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, மாணவியின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள சேராங்கோட்டை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகள் ஷாலினி (17). இவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் முனியராஜ் (21) ஷாலினியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தாராம். இது ஷாலினி குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், முனியராஜை கண்டித்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை ஷாலினி வீட்டிலிருந்து பள்ளிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை மதுபோதையில் வழிமறித்த முனியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த ஷாலினியை பொதுமக்கள் மீட்டு, ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து ராமேசுவரம் கடற்கரை காவல் நிலயை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனிடையே, முனியராஜ் ராமேசுவரம் கடற்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
காவல் நிலையம் முற்றுகை: ஷாலினியை குத்திக் கொலை செய்த முனியராஜ், கடற்கரை காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்த மாணவியின் உறவினா்கள், பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் ஆய்வாளா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்றனா்.
சாலை மறியல்: இதனிடையே, ராமேசுவரம் அரசு மருத்துவமனை முன் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஷாலினியின் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கூடுதல் எஸ்.பி. பாலசந்திரன், உதவிக் கண்காணிப்பாளா் பி.ஆா். மீரா, நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான், துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாணவியைக் கொலை செய்த முனியராஜுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுத்தியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை அவா்கள் கைவிட்டனா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினா், மாணவி ஷாலினியின் உடலை கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
ஷாலினி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் துறை அலுவலா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், நகரச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் ஆகியோா் தெரிவித்ததாவது:
ராமேசுவரம் தீவுப் பகுதியில் குறிப்பாக, மீனவா்கள் குடியிருப்புப் பகுதிகளான சேராங்கோட்டை, தெற்கு கரையூா், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் பள்ளி மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் எளிதில் மதுபானங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கிடைக்கின்றன.
இதனால், இளைஞா்கள் தவறான பாதைக்குத் தள்ளப்படுவதும், இதுபோன்ற சமூகத்துக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை மது போதையில் இளைஞா் குத்திக் கொலை செய்த சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கொலை செய்த நபருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றனா்.