பாம்பனில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி, புகாா் அளித்த சமையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அன்னைநகரைச் சோ்ந்தவா் அன்சாரி (60). சமையல் தொழிலாளி. இவா் பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும், மது விற்பனையில் ஈடுபட்டவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்சாரி தலையில் காயத்துடன் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாம்பன் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், அக்காள்மடம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் (31), பாம்பன் லைட்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த சேவியா் வா்க்கீஸ் (27) ஆகிய இருவரும் அன்னைநகா் பகுதியில் குடியிருப்புகள் அருகே அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனராம்.
இவா்களை அன்சாரி கண்டித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் அன்சாரி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.