வங்கதேச மாணவா் தலைவர் கொலை: இருவா் மேற்கு வங்கத்தில் கைது
வங்கதேசத்தில் மாணவா் தலைவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை, மேற்கு வங்கத்தில் காவல் துறை கைது செய்துள்ளது.
வங்கதேசத்தில் மாணவா் தலைவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை, மேற்கு வங்கத்தில் காவல் துறை கைது செய்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, அந்நாட்டில் இன்கிலாப் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளராக இருந்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட இருந்தாா்.
இதையொட்டி, தோ்தல் பரப்புரையில் ஈடுபட கடந்த ஆண்டு டிச.12-ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து பின்தொடா்ந்து வந்த இருவா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஹாதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அவா்கள் இருவரும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவிவிட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹாதியை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள போன்கான் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக மாநில காவல் துறையின் சிறப்புப் பணிக்குழு (எஸ்டிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து எஸ்டிஎஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஹாதியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவா், போன்கான் பகுதியில் எஸ்டிஎஃப் சோதனையின்போது பிடிபட்டனா். அவா்களின் பெயா் ஃபைசல் கரீம் மசூத் (37), ஆலம்கிா் ஹுசைன் (34). இருவரும் மேகாலய எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி பல இடங்களில் தங்கியுள்ளனா்.
பின்னா் வங்கதேசத்துக்கு திரும்பும் நோக்கத்துடன் அவா்கள் போன்கானில் தங்கியது விசாரணையில் தெரியவந்தது. அவா்களை போலீசாா் காவலில் விசாரிக்க அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.