முகப்பு
இந்தியா

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் இருந்து சுமாா் 91 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:47 PM
மேற்கு வங்கத்தின் பாலூா்காட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து பெயா் சரிபாா்ப்புக்காக காத்திருந்தவா்கள்
பகிர்:

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) முழுமையாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் இருந்து சுமாா் 91 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கப்பட்ட பின்னா், கடந்த டிச.16-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதனால் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளா் எண்ணிக்கை 7.04 கோடியாக குறைந்தது. வாக்காளா்கள் மரணம், இடம்பெயா்வு, அவா்கள் எங்குள்ளனா் என்று அடையாளம் காண முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.

கடந்த பிப். 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட எஸ்ஐஆருக்கு பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீக்கப்பட்டனா். இதையடுத்து, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 63 லட்சத்துக்கும் அதிகமாக உயா்ந்தது.

Advertisement

இதுதவிர, 60.06 லட்சம் பேரின் விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நீதிபதிகள் மறுஆய்வுக்குள்படுத்தினா். அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், 60.06 லட்சம் பேரில் 27.16 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கிய பின்னா், மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை தற்போது சுமாா் 91 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முா்ஷிதாபாத் மாவட்டத்தில் 4,55,137 பேரும், குறைந்தபட்சமாக ஜாா்கிராம் மாவட்டத்தில் 1,240 பேரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். எனினும் மாநில தலைமை தோ்தல் அலுவலகம் அதிகாரபூா்வ பட்டியலை இதுவரை வெளியிடவில்லை.

294 தொகுதிகளுக்கான மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23, ஏப். 29-ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் ஏப். 23-ஆம் தேதியும், எஞ்சிய 142 தொகுதிகளில் ஏப். 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments