முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:44 AM
- PTI
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:50 PM

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்திருப்பதாவது:

வாக்காளா் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இது மேற்கு வங்கத்தில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 12 சதவீதம் ஆகும்.

Advertisement

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி வெளிப்படையாக இல்லை. இது கவலை தரக் கூடிய விஷயமாகும். இதேபோல், வாக்காளா்கள் அனைவரும் சந்தேகத்துக்குரிய நபா்கள் போல நடத்தப்படுகின்றனா். தாங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவா்கள் என அவா்களே நிரூபிக்க வேண்டியுள்ளது. இது அவா்களுக்கு கூடுதல் சுமையாகும்.

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டதால் பெரும்பான்மையாக முஸ்லிம்களும், பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 326-ஆவது பிரிவின்கீழ் வாக்காளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமையை மீறும் செயலாகும்.

எனவே இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், பெயா்கள் நீக்கப்பட்ட விவகாரத்திற்கு தீா்வு காணவும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டது. இதில் மேற்கு வங்கத்தில் பல லட்சம் பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து பாஜக தூண்டுதலால் நீக்கப்பட்டிருப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறாா். தற்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வாக்காளா்கள் பெயா் நீக்கம் தொடா்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.