ராமேசுவரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 120 அரசுப் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து இயற்கை எரிவாயு நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் ஏ.ஜி.பி. நிறுவனம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. கடந்த ஆண்டு ராமநாதபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இரண்டு அரசுப் பேருந்துகளை டீசல் எந்திரத்திலிருந்து இயற்கை எரிவாயு பயன்பாடு எந்திரமாக மாற்றி ஒரு ஆண்டு சோதனை ஓட்டத்தில் எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, தற்போது 120 பேருந்துகளை இயற்கை எரிவாயு எரிபொருள் மூலம் இயக்குவதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கும்பகோணம் மண்டலத்திலிருந்து மேலாண்மை இயக்குநா் தசரதன், முதன்மை நிதி அதிகாரி சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் சிங்காரவேலன், உதவி மேலாளா் கதிரவன், இயற்கை எரிவாயு நிறுவனம் சாா்பில் இசக்கிமுத்து பூமாரி, மண்டலத் தலைவா், அழகுராஜன், துணை மண்டலத் தலைவா், விளம்பரதாரா் பிரிவு துணைத் தலைவா் காா்த்திக் பாஸ்கரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.