முகப்பு
தமிழ்நாடு

ராமேசுவரத்தில் 12 இயற்கை எரிவாயு பேருந்துகள்: அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

ராமேசுவரத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் 12 விடியல் பயண பேருந்துகளின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 4:42 AM
ஆா்.எம்.எஸ் போட்டோ 1 ராமேசுவரத்தில் 12 இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளின் இயக்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:45 PM

ராமேசுவரத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் 12 விடியல் பயண பேருந்துகளின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடபைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தாா். மேலும், அவா் பேருந்தில் அமா்ந்து சிறிது தூரம் பயணம் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 750 இயற்கை எரிவாயு இயக்கப்படும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதில், முதல் கட்டமாக 12 பேருந்துகளின் இயக்கம் ராமேசுவரத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிற்றுந்துகளை தனியாா் இயக்கி வருகின்றனா். வரும் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சிற்றுந்துகளை அரசே இயக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் இயற்கை எரிவாயு பேருந்துகள் இயக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

ராமேசுவரத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 12 பேருந்துகள், ராமேசுவரம், கோயில், தனுஸ்கோடி, தங்கச்சிடம், பாம்பன், நடராஜபுரம், புதுரோடு, சேரங்கோட்டை, சுந்தரமுடையான், உச்சிப்புளி ஆகிய பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும். அந்தப் பகுதியில் இயக்கப்பட்ட டீசல் பேருந்துகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் தசரதன், பொது மேலாளா்கள் சிவசங்கரவேலன், ரவிக்குமாா், ராமேசுவரம் நகா் மன்றத் தலைவா் நாசா்கான், துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி, உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.