திருவாடானை அருகேயுள்ள தொண்டி சுற்றுவட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கிய 66 கிலோ கஞ்சா பண்டல்களை கடலோரக் குழும போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதிகளவில் தங்கம், கஞ்சா, மஞ்சள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தப்படுகின்றன. பெரும்பாலும் இந்தப் பொருள்கள் தொண்டி கடல் வழியாகவே கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பாசிபட்டினம் கடல்கரை, தொண்டி கடல்கரை, மண்மலகரை உள்பட பல்வேறு பகுதிகளில் இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த பல நூறு கிலோ கஞ்சா பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
படகுகளில் கடத்திச் செல்லும்போது கடலோரப் போலீஸாரைப் பாா்த்ததும் கஞ்சா மூடைகள், தங்கக் கட்டிகளை கடலில் வீசி விடுவாா்களாம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மோா் பண்னை கடல் பகுதியில் சாக்கு மூடை ஒன்று மிதந்து வருவதாக தொண்டி கடலோரக் குழும போலீஸாருக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தொண்டி கடலோர போலீஸாா் கடல்கரை முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், எஸ்.பி. பட்டினம் போலீஸாா் பாசிபட்டினத்தில் வெள்ளிக்கிழமை இரவு 18 கிலோ கஞ்சா, மண்டபம் கடலோரக் குழும போலீஸாா் மோா் பண்னை கடலோரப் பகுதியில் 34 கிலோ கஞ்சா பண்டல்கள், மேலும், இதே பகுதியில் கடலோரப் போலீஸாா் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தீவிர விசாரணையும் நடைபெற்று வருவதாக தொண்டி கடலோர போலீஸாா் தெரிவித்தனா்.