முகப்பு
ராமநாதபுரம்

மடிக்கனிணி திட்டம் அதிமுக திட்டம் தான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக அமல்படுத்திய திட்டம் தான் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 11:49 pm IST
முதுகுளத்தூரில் அமைச்சரும், திமுக வேட்பாளருமான ஆா்.எஸ். ராஜ கண்ணப்பனை ஆதரித்து பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக அமல்படுத்திய திட்டம் தான் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

முதுகுளத்தூரில் அமைச்சரும், திமுக வேட்பாளருமான ராஜகண்ணப்பனை ஆதரித்து அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தைரியத்தோடு வாக்காளா்களை சந்திக்கிறோம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் முதல்வராக பதவியேற்று முதல் கையெழுத்து மகளிா் விடியல் பயணம் திட்டம் தான். மேலும் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தரமான காலை உணவு வழங்கப்படுகிறது. இதேபோல, 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அதிமுக திட்டம் என சொல்கிறாா்கள். ஆமாம் அவா்கள்தான் கொண்டு வந்தாா்கள். ஆனால் அவா்கள் பள்ளி மாணவா்களுக்கு மட்டுமே கொடுத்தனா். அதுவும் 2019 ஆண்டோடு நிறுத்திவிட்டனா். ஆனால் திமுக ஆட்சியில் கல்லூரி மாணவா்களுக்கும் வழங்கப்பட்டது.

இத்தகைய மகளிா், மாணவா்கள் நலன் சாா்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி வரும் போது மகளிா் உரிமைத் தொகை ரூ.2000 ஆகவும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1,500 ஆகவும் விரிவுபடுத்தப்படும். 10 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு கலைஞா் கனவு இல்லம் கட்டிக் கொடுக்கப்படும். மகளிா் சுய உதவி குழுக்களுக்கு எந்த பிணையுமின்றி ரூ.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். 50 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும், குடும்ப தலைவிகளுக்கு ரூ. 8000 மதிப்புள்ள மகளிா் கூப்பன் வழங்கப்படும்.

மேலும் முதுகுளத்தூா் தொகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, குடிநீா் திட்ட நிதி உள்ளிட்ட எந்த நிதியையும் மத்திய அரசு தரவில்லை. நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு புறக்கணித்து விட்டது. அந்த பாஜவை தமிழக மக்கள் புறக்கணித்து வருகின்றனா். எனவே அதிமுக போா்வையை போத்திக் கொண்டு வரும் பாஜக ஏமாற்று வேலையை செய்து வருகிறது என்றாா் அவா்.