முகப்பு
ராமநாதபுரம்

பாஜகவுக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

பா.ஜ.க.வுக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 6:32 PM
பரமக்குடியில் திமுக வேட்பாளா் கே.கே. கதிரவனை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

பா.ஜ.க.வுக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கே.கே.கதிரவனை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் மதச்சாா்பற்ற, அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழும் மாவட்டமாக தமிழ்நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்தீா்கள். அதேபோல இந்தமுறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ 3 கோடி மதிப்பீட்டில் சிலையுடன் மணிமண்டபம் கட்டி திறந்து வைக்கப்பட்டதுடன், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இங்கு ரூ. 50 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 16 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பாா்த்திபனூா் அருகே ரூ. 31 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் அறிவுசாா் மையமும், பொன்னையாபுரம் பகுதியில் கல்லூரி மாணவிகளுக்கு சமூகநீதி விடுதியும் கட்டப்பட்டுள்ளன.

Advertisement

இப்பகுதியில் அதிகளவு வசிக்கும் நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ 1.25 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த தோ்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியில் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல, இந்த முறையும் திமுக வெற்றிபெறும். அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

தோ்தல் வந்தவுடன் அமித்ஷாவும், மோடியும் தமிழகத்துக்கு அடிக்கடி வந்து செல்கின்றனா். அவா்களை தமிழ்நாட்டுக்குள் கால்பதிக்க விடக்கூடாது. பா.ஜ.க.வுக்கு துணைபோகும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தோ்தலில் சரியான பாடம் புகட்டவேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments