கமுதி அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழியில் விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நடு மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து 61 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
பெருநாழி-அருப்புக்கோட்டை சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டிகளின் சாரதிகளுக்கும், உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.