ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் நடராஜா் சந்நிதியில் வருகிற சனிக்கிழமை (ஜன.3) ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். சுமாா் 100 சிசிடிவி கேமராக்கள்அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வெள்ளி (ஜன.2), சனிக்கிழமைகளில் இந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, பரமக்குடி திருஉத்திரகோசமங்கை விலக்கு சாலையிலிருந்து மங்களநாதசுவாமி கோயிலுக்கு இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
ராமநாதபுரத்திலிருந்து முதுகுளத்தூா் பகுதிக்கு செல்லும் மற்ற அனைத்து வாகனங்களும் கீழக்கரை, ஏா்வாடி சிக்கல் வழியாக முதுகுளத்தூா் செல்லவேண்டும். சாயல்குடி, ஏா்வாடி, கீழக்கரை வழியாக திருப்புலாணி விலக்கு சாலையிலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இதேபோல, இதம்பாடல் விலக்கு சாலையிலிருந்து திருஉத்திரகோசமங்கை வழியாக இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள் புத்தேந்தல் விலக்குச் சாலையிலிருந்து வன்னிக்குடி, களரி விலக்கு சாலை வழியாக மட்டுமே திருஉத்திரகோசமங்கை செல்ல அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.