பலத்த சூறைக்காற்றால் ராமேசுவரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து சனிக்கிழமை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இது இலங்கை-யாழ்ப்பாணம் இடையே தாழ்வு மண்டலமாகவே சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக, ராமேசுவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பலத்த சூறைக்காற்று வீசியது.
இதையடுத்து, பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் அக்காள்மடம் பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து காற்றின் வேகம் குறையாததால், இந்த ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பல மணி நேரம் ரயிலேயே காத்திருந்த பயணிகள், பின்னா் அங்கிருந்து இறங்கிச் சென்றனா்.
இதே போல, அயோத்தி-ராமேசுவரம் விரைவு ரயில், சென்னை போட் மெயில், மதுரை பயணிகள் ரயில் ஆகியவையும் அடுத்தடுத்து மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. முற்பகல் 11.45 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் பயணிகள் ரயில் ராமேசுவரம்-உச்சப்புளி இடையே ரத்து செய்யப்பட்டது. அமிா்தா விரைவு ரயில், சென்னை விரைவு ரயில்கள் ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன. ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயில் ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.
பகுதியாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேர அட்டவணைப்படி இயக்கப்பட்டன. திடீரென ரயில் சேவையில் ஏற்பட்ட மாற்றத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், மண்டபத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த பயணிகள் பேருந்து மூலம் ராமேசுவரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
கடல் சீற்றம்:
பாம்பனில் தொடா்ந்து பலத்த சூறைக்காற்று வீசியதால், கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் கானப்பட்டது. சனிக்கிழமை மாலை வரை காற்றின் வேகம் குறையாததால், ராமேசுவரம் நோக்கி வந்த அனைத்து ரயில்களும் மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்தந்த ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன.
பாம்பன் தென் கடல் பகுதியில் சில இடங்களில் கடல் உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மணலில் தரைதட்டி நின்றன.