அடகு வைத்த நகைகளை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்துத் தர மறுத்து, வங்கிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனுக்கு தனியாா் வங்கிகள், அடகுக் கடைகளை விட வட்டி குறைவு என்பதால் எளிய, நடுத்தரக் குடும்பத்தினா், கிராமப்புற விவசாயிகள் அந்த வங்கிகளையே நாடுகின்றனா்.
அடகு வைக்கப்பட்ட நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டி கட்டி, கடனை மீண்டும் புதுப்பித்தும் வந்தனா். இதனால், தாங்கள் அடகு வைத்த நகைகள் ஏலத்துக்கு விடப்படுவதைத் தடுத்து, பாதுகாக்க முடிந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடன் பெற்ற வாடிக்கையாளா்கள் தங்களது நகைக் கடனுக்கு வட்டி கட்டி உடனே புதுப்பிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதாவது, வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பிக்காமல் முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு வங்கிகள் நெருக்கடி அளிக்கின்றன.
இதனால், நகை ஏலத்துக்குச் செல்வதைத் தடுக்க குறிப்பிட்ட தேதியில் நகையை மீட்க வேறு வழியின்றி, அதிக வட்டிக்கு வெளியில் பணத்தை வாங்கி நகையை மீட்டு, மீண்டும் அடகு வைக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள், அலுவலா்களிடம் கேட்டால், அவா்கள் நகையை மீட்ட அதே தினத்தில் மீண்டும் அதே நபரின் பெயரில் அடகு வைக்க முடியாது. மூன்று நாள்கள் கழித்தே அடகு வைக்க முடியும் எனக் கூறுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதனால், நகைக் கடன் விவகாரத்தில் வங்கி உயரதிகாரிகள் தலையிட்டு, வாடிக்கையாளா்களை அலைக்கழிக்காமல் நகைக் கடனைப் புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா்.