மழையின்றி கருகிய நெல்பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, கருகிய நெல்பயிா்களுடன் விவசாயிகள் முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட கீழக்குளம், மேலக்குளம், முதுகுளத்தூா், கீரனூா், சாத்தனூா், புல்வாய்குளம், ஆணைசேரி, மணலூா் உள்ளிட்ட 10 கிராமங்களில் 7,500 ஹெக்டா் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் பருவ மழை பொய்த்ததால் வயலிலேயே கருகின.
இதயைடுத்து, தமிழ் நாடு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்கக் கோரி, முதுகுளத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து கருகிய நெல்பயிா்களுடன் ஊா்வலமாகச் சென்று முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கருகிய நெல்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், பதராகிப் போன நெல்பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். பின்னா், வட்டாட்சியா் கோகுல்நாத்திடம் கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.