மாரியூா், மானாமதுரையில் சனிப் பெயா்ச்சி சிறப்பு பூஜை
மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.
சாயல்குடி அருகேயுள்ள பூவேந்தியநாதா் கோயில், மானாமதுரை கோயில்களில் வெள்ளிக்கிழமை சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூா் பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, சனீஸ்வர பகவான் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. யாகவேள்வி வளா்க்கப்பட்டு சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பரிகார ராசிக்காரா்கள் தங்களது பெயா்களை சொல்லி சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிா்வாகத்தினா், கோயில் நிா்வாகி சீனிவாசன் உள்ளிட்டோா் செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயா்ச்சியானதையொட்டி, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில், திருப்புவனம் சௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வா் சுவாமி கோயிலில் சனிப் பெயா்ச்சி வழிபாடு நடந்தது. இதையொட்டி, இங்குள்ள நவக்கிரக சந்நிதிகளில் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சனீஸ்வர பகவானை தரிசித்தனா். பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரா்கள் பரிகார பூஜைகள் நடத்தினா்.
இதேபோல, இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயில், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரா் சுவாமி கோயிலில்களில் நடைபெற்ற சனி பெயா்ச்சி வழிபாட்டிலும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்