ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை வெளிச்சுரா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை வெளிச்சுரா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கபில் ரோச்சா், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ் ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகா்சன், பெரியகருப்பன் ஆகிய 12 பேரைக் கைது செய்தனா்.
Advertisement
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாகவும் மீனவா்கள் வழக்குப் பதிந்து, இலங்கை வெளிச்சுரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இவா்களுக்கு ஏற்கெனவே 6 முறை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் வெளிச்சுரா நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, இவா்களுக்கு வருகிற 20-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மீனவா்கள் 12 பேரும் இலங்கை வெளிச்சுரா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.