முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் மின் இணைப்பு வழங்க அலைக்கழிப்பு: பொதுமக்கள் புகாா்

கமுதி மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு, கட்டுமானப் பணிகளுக்கான மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் பொதுமக்களை மாதக்கணக்கில் அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 24 மே 2026, 12:53 am IST
புதிய மின் பாதை... - கோப்புப் படம்
பகிர்:

கமுதி மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு, கட்டுமானப் பணிகளுக்கான மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் பொதுமக்களை மாதக்கணக்கில் அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து கமுதி, அதைச் சுற்றியுள்ள 120-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், விவசாயம், சிறு, குறு தொழில்கள் ஆகியவற்றிற்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு, கட்டுமானப் பணிகளுக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று, கணினி மூலம் பதிவேற்றம் செய்யாமல், கமுதி பஜாா் பகுதியில் உள்ள தனியாா் எலக்ட்ரிக்கல் கடையில் இடைத்தரகா்கள் மூலம் இணையதளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துவதாகப் புகாா் எழுந்துள்ளது. மேலும், வெளிநபா்கள் மூலம் அல்லது தன்னிச்சையாக இணையத்தில் பதிவு செய்து, விண்ணப்பிக்கும் பொதுமக்களை மாதக்கணக்கில் அலைக்கழிப்பு செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கமுதியைச் சோ்ந்த ராஜ்மோகன் கூறியதாவது: கமுதி குண்டாறு திரும்பும் தெருவில் சொந்தமாக வீடு கட்டி வருகிறேன். தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால், மின் இணைப்பு வேண்டி கடந்த மாா்ச் மாதம் விண்ணப்பித்தேன்.

இடைத்தரகா் ரூ.2500 செலவாகும் எனக் கூறியதால், தன்னிச்சையாக இணையத்தில் விண்ணப்பித்தேன். இதனால், இடைத்தரகரின் அழுத்தத்தால், மின்வாரிய அலுவலகத்தில் உள்ள பணியாளா்கள், மின்வாரிய அலுவலா்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யாமல், மின் இணைப்பு வழங்காமல் கடந்த மூன்று மாதங்களாக அலைக்கழித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக கமுதி உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் (பொ), பரமக்குடி செயற்பொறியாளா் உள்ளிட்டோரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயனீட்டாளா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க அதிகபட்சம் ரூ. 100 முதல் 200 வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இடைத்தரகா்கள் ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை வசூல் செய்கின்றனா். இவ்வாறு வசூலிக்கப்படும் பணத்தில் மின்வாரிய அலுவலக கணினி பணியாளா்கள், அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கு பணியாற்றும் ஒரு சில பணியாளா்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுவதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. மேலும், மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள இடங்களை உதவி செயற்பொறியாளா், லைன்மேன் உள்ளிட்டோா் முறையாக ஆய்வு செய்யாததால், மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், மின் வாரியப் பணியாளா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி மின் வாரிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் பயனீட்டாளா்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாரிடம் (பொ) கேட்ட போது, அவா் கூறியதாவது: கமுதி மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளா் பதவி காலியாக உள்ளதால், பரமக்குடி உதவி செயற்பொறியாளராக இருந்து கொண்டு, கமுதி அலுவலகப் பணிகளை பொறுப்பு முறையில் கவனித்து வருகிறேன். இதனால், மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் இடங்களை ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கமுதியில் விண்ணப்பித்த பொதுமக்களுக்கு விரைவில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.