மானிய உதவியுடன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.73 லட்சம் மோசடி: தம்பதி கைது
மானிய உதவியுடன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 2.73 லட்சம் மோசடி செய்த தம்பதியை, சிவகங்கை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மானிய உதவியுடன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 2.73 லட்சம் மோசடி செய்த தம்பதியை, சிவகங்கை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கட்டதேவன்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மனைவி பாண்டிச்செல்வி. இவர், சில ஆண்டுகளுக்கு முன் மானாமதுரை அருகே கேப்பனூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, இவரது உறவினர் வீட்டருகே வசிக்கும் பிரேம்குமார், அவரது தாயார் செல்வி, மனைவி சுபாதேவி உள்ளிட்டோர், தாட்கோ அலுவலகத்தில் மானிய உதவியுடன் கடன் பெற்றுத் தருவதாக பாண்டிச் செல்வியிடம் கூறியுள்ளனர்.
பின்னர் அதற்காக, ரூ. 2 லட்சத்து 73 ஆயிரம் வரை பணத்தை பெற்றனராம். இதையடுத்து, பிரேம்குமார் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் கடனுதவியும் பெற்றுத் தரவில்லையாம், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
எனவே, பாண்டிச்செல்வி அவர்களிடம் பலமுறை கேட்டும் உரிய பதிலளிக்காததால், சில மாதங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, பிரேம்குமாரின் தாயார் செல்வியை கைது செய்து விசாரித்து வந்தனர்.
பின்னர், தலைமறைவாக இருந்த பிரேம்குமார், அவரது மனைவி சுபாதேவியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.