கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 30 பேர் காயம்: 600 காளைகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 30 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 30 பேர் காயமடைந்தனர்.
கிருங்காக்கோட்டையில் உள்ள பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், சிங்கம்புணரி, பிரான்மலை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஒட்டன்சத்திரம், பூலகுறிச்சி, வாரிப்பட்டி, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மாங்குடி, குன்றக்குடி, தட்டட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக அனுமதிக்கப்பட்டனர். இதில், 30-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு, கட்டில், பீரோ, குக்கர், கிரைண்டர், மின்விசிறி, அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், நகரம்பட்டி பூசாரி காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வீரத் தமிழச்சி என்ற பெயரில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை, கிருங்காக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.