சிவகங்கை அருகே செயல்படாத நவீன உரக் கிடங்கு: நோய்த் தொற்றால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை அருகே சுந்தரநடப்பு பகுதியில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள நவீன உரக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால், அப் பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை அருகே சுந்தரநடப்பு பகுதியில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள நவீன உரக் கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால், அப் பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை-மானாமதுரை சாலையில் சுந்தரநடப்பு கிராமம் அருகே சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட நவீன உரக் கிடங்கு மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 2008-2009ஆம் ஆண்டு 12ஆவது நிதிக் குழு பரிந்துரைத் திட்டத்தின் கீழ் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றுவதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாகியும் இன்னும் நவீன உரக்கிடங்கு பணிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதனால், சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை, நெடுங்குளம், உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்காப்பள்ளம், குட்டித்தின்னி உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இவை தவிர, மழைக் காலங்களில் மழை நீர் குப்பைகளுடன் சேர்ந்து கண்மாய் பகுதியில் புகுவதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது என புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நவீன உரக் கிடங்கு மையத்தை செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து சிவகங்கை நகராட்சி ஆணையர் கூறுகையில், இது குறித்து ஏற்கெனவே அப் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனடிப்படையில்,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நவீன உரக் கிடங்கு மையம் செயல்படுவதற்கான அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாத காலத்தில் பணிகள் நிறைவு பெற்றதும், தற்போதுள்ள குப்பைகளை நவீன முறையில் சுழற்சி செய்து உரங்களாக மாற்றும் பணி தொடங்கப்படும் என்றார்.