முகப்பு
சிவகங்கை

அழிவின் பிடியில் ஈத்தல் கூடை முடையும் தொழில்: அரசு கை கொடுக்குமா?

சிவகங்கை மாவட்டத்தில், ஈத்தல் கூடை முடையும் தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:14 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில், ஈத்தல் கூடை முடையும் தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த ஈத்தல் ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படுகிறது. மலைப் பகுதிகளில் இயற்கையாக  வளரும் ஈத்தலைக் கொண்டு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தட்டு, முறம், கூடை, காய்கறிக் கூடை, தட்டுக் கூடை, பெட்டிக் கூடை, விசிறி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருள்கள் அனைத்தும் இயற்கையானது மட்டுமின்றி சுற்றுச் சூழலுக்கும் உகந்தது. இருப்பினும் பிளாஸ்டிக் கூடை உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அவற்றின் ஆதிக்கம் அதிகரித்து, ஈத்தலால் செய்யப்படும்  பொருள்களுக்கான வரவேற்பு குறைந்து விட்டது. மூங்கில் மற்றும் ஈத்தல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாமிடம் வகித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டை  பொருத்தவரை இத்தொழில் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமங்களில் கூட வீட்டு  உபயோகத்துக்கும், வேளாண் பணிகளுக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம். இதனால், போதிய வருவாய் இன்றி, இத்தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் படிப்படியாக மாற்றுத் தொழிலை நாடி வருகின்றனர். 
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், சாக்கோட்டை,சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், திருப்புவனம், காளையார்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் ஈத்தல் பொருள்கள் தயாரிக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். ஆனால், தற்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கூடை முடையும் தொழிலுக்கு தேவையான மூலப் பொருள்களின் தட்டுப்பாடு, பொதுமக்களிடமிருந்து வரவேற்பு இல்லாததது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களும் தற்போது வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த ஈத்தல் கூடை முடையும் தொழிலாளர் காளியம்மாள் கூறியதாவது:   கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈத்தல் தட்டு, முறம், கூடை, காய்கறிக் கூடை, விசிறி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து மூங்கில் கூடைகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இங்கு ரூ.60 முதல் ரூ.130 வரை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருள்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் கூடை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் ஈத்தல் கூடை தொழில் நலிவடைந்துள்ளது. எனினும், பரம்பரை தொழில் என்பதால் இதை விடாமல் செய்து வருகிறோம். இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஈத்தல் கூடை முடையும் பணிக்கு ஆள்கள் இருக்கமாட்டார்கள். 
எனவே, பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈத்தல் பொருள்களை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கென கூட்டுறவு சங்கம் அமைத்து ஈத்தல் மூலம் செய்யப்படும் பொருள்களை அரசு கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தால் ஈத்தல் கூடை முடையும் தொழிலும், சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.