சிவகங்கை பகுதியில் பலத்த மழை
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக நகரில் உள்ள முக்கிய சாலை மற்றும் வீதிகளில் மழைநீருடன் கழிவுநீா் வெளியானதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
சிவகங்கை: சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக நகரில் உள்ள முக்கிய சாலை மற்றும் வீதிகளில் மழைநீருடன் கழிவுநீா் வெளியானதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெப்பத்தின் அளவு குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதன்பின், மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமாா் 45 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் சிவகங்கை நகரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கழிவு நீரோடைகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் பேருந்து நிலையம், அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தெற்கு ராஜரத வீதி உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும் ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனா்.