மானாமதுரை ஆனந்தவல்லி கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த ஆடித்தபசு விழா
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித்தபசு விழா பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித்தபசு விழா பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது. இதனால் விழா நிகழ்ச்சிகளைக் காண முடியாமல் பக்தர்கள் வேதனையடைந்தனர்.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா, ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்று பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இக் கோயில் அடைக்கப்பட்டு தினமும் அம்மனுக்கும் சுவாமிக்கும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. இந் நிலையில் ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடக்க வேண்டிய சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டதைத்தொடர்ந்து ஆடித்தபசு திருவிழா தொடங்குவதற்கு முன்னர் கரோனா தொற்று பிரச்சனை முடிந்து ஆடித்தபசு திருவிழா நடத்தப்பட்டுவிடும் என மானாமதுரை பகுதி பக்தர்கள் நம்பியிருந்தனர். ஆனால் வைரஸ் தொற்று பரவல் பிரச்சனை நீடிப்பதால் கோயில்கள் திறக்கவும் திருவிழாக்கள் நடத்தவும் தடை தொடர்கிறது. இதனால் இந்தக் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் திருவிழாவின்போது அம்மனுக்கு வழக்கமாக நடைபெறும் அபிஷேக, ஆராதனைகள் நடக்கும் என்றும் இதில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் கடந்த 22 ந் தேதி ஆடித்தபசு விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் உற்சவ மூர்த்திகள் இருக்கும் இடத்திலேயே ஆனந்தவல்லி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய வைபவமாக 10 ஆம் நாள் நடந்த தபசு உற்சவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் அதே இடத்தில் சோமநாதர் சுவாமி பிரியாவிடை சமேதமாய் அலங்காரத்துடன் எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது.
ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வைத்தனர். ஆடித்தபசு விழாவில் பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து மானாமதுரையைச் சேர்ந்த பெண் பக்தர் ஜோதி கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு விழா நாட்களில் கோயில் முன் மண்படத்தில் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக 10 ஆம் நாள் நடக்கும் ஆடித்தபசு விழாவில் ஆனந்தவல்லி அம்மனுக்கு சோமநாதர் சுவாமி விருஷாபரூடராக எழுந்தருளி காட்சியளிக்கும் வைபவம் கோயிலுக்கு வெளியே நடத்தப்படும். இந் நிகழ்வைக் காண கோயிலுக்கு முன்பு திரளானோர் கூடுவார்கள்.
அப்போது அம்மனுக்கும் சுவாமிக்கும் அணிவிக்கப்படும் மாலைகளை பெண்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்வார்கள். இந்த மாலைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று பூஜையறையில் வைத்தால் தங்களது குடும்பத்தில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்தாண்டு கரோனா தொற்று பரவல் பிரச்சனை தொடர்வதால் திருவிழா ரத்து செய்யப்பட்டு தபசு உற்சவத்தைக் பார்க்க முடியாமல் போனது வேதனையாக உள்ளது என்றார்.