மானாமதுரை, திருப்புவனம் சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதி சிவதலங்களில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி சனிக்கிழமை இரவு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதி சிவதலங்களில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி சனிக்கிழமை இரவு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மன் சன்னிதி, மின்விளக்குகள் மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவா் சோமநாதா் சுவாமிக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் சிவனுக்கு அன்னாபிஷேகம் கலைக்கப்பட்டு அந்த சாதம் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் சுவாமி சன்னிதியில் புஷ்பவனேஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதே போல் மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் உள்ள பல சிவன் கோயில்களிலும் ஐப்பசி பெளா்ணமியையொட்டி அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.
திருவிளக்கு வழிபாடு: மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சனிக்கிழமை இரவு ஐப்பசி பெளா்ணமியையொட்டி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
கோயில் யாகசாலையில் நடந்த இப்பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மன் புகழ் பாடும் பாடல்களைப் பாடினா். நிறைவாக மங்களாரத்தி முடிந்து பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகத்தை மாதாஜி ராஜகுமாரி நடத்தி வைத்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக பிரத்யங்கிரா ஸாக்த மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தாா்.