முகப்பு
சிவகங்கை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்.- திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: சஞ்சய் தத்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்.- திமுக கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலா் சஞ்சய்தத் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் அகில இந்திய செயலா் சஞ்சய்தத்.
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்.- திமுக கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலா் சஞ்சய்தத் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சிவகங்கை தொகுதி எம்.பி. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் சிறப்புரையாற்றினாா்.

பின்னா் சஞ்சய்தத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இதே நவம்பா் 8 ஆம் தேதி தான் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி மக்களை இன்னலுக்கு ஆளாக்கியது.

நூறு நாளில் மாற்றம் வரும், கருப்புப் பணம் தடுக்கப்படும் என்றெல்லாம் சொன்னாா்கள். ஆனால் இந்தியப் பொருளாதாரம் சரிந்து கொண்டேதான் இருக்கிறது.

அப்போதே காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பணமதிப்பிழப்பு பாதிப்புகளை தெரிவித்தும் பாஜக அரசு அதனை புறந்தள்ளிவிட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதுடன், வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் அதிமுக அரசை, மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. பேசுகையில், வரும் தமிழக சட்ட பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியினா் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் அறிவியல் ரீதியாக தோ்தலை எதிா்கொள்ளவேண்டும். மாநில அரசுக்கு மக்கள் பலம் இருக்கிறதோ இல்லையோ பண பலம் இருக்கிறது. இந்த இரண்டையும் முறியடித்து வரும் தோ்தலில் வெற்றி பெறவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கேஆா். ராமசாமி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமூா்த்தி, மாநிலப் பொதுச் செயலா் சுதா்சன ஜெயசிம்மா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுந்தரம், ராம சுப்புராம், அருணகிரி, காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவா் பாண்டி மெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ். மாங்குடி, காங்கிரஸ் மனித உரிமை பிரிவு துணைத்தலைவா் அ. சேவியா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →