சிவகங்கை

மாா்கழி அஷ்டமி: மானாமதுரை, காரைக்குடியில் சப்பரம் வீதியுலா

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காரைக்குடியில் உள்ள கோயில்களில் புதன்கிழமை மாா்கழி அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.

மாா்கழி மாதம் வரும் அஷ்டமி தினத்தன்று சிவபெருமான் உலக ஜீவராசிகளுக்கு படியளந்த நாளாகக் கருதப்படுகிறது. இதையடுத்து மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சன்னிதி முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும், மற்றொரு ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாதா் சுவாமியும் அலங்காரத்துடன் எழுந்தருளினா். அதன்பின் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அதைதொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சப்பரத்தேரில் சோமநாதா் சுவாமியும், மற்றொரு சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினா். தீபாராதனை காட்டப்பட்டு காலை 9.30 மணிக்கு மேளதாளம் முழங்க இரு சப்பரத் தோ்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. வீதிகளில் மக்கள் அம்மனையும் சுவாமியையும் வரவேற்று பூஜைகள் நடத்தி வழிபட்டனா். பக்தா்கள் சப்பரத்தேருக்கு பின்னால் ஜீவராசிகளுக்கு படியளக்கும் வகையில் பச்சரிசியை தூவியபடி வந்தனா். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்த இரு சப்பரங்களும் பகல் 12.30 மணிக்கு நிலை சோ்ந்தன. சுவாமிக்கான பூஜைகளை கோயில் பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி என்ற சக்கரைப்பட்டா், ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா். அஷ்டமி சப்பர விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: மாா்கழி அஷ்டமியையொட்டி காரைக்குடி நகரச்சிவன் கோயிலில் புதன்கிழமை காலை மீனாட்சி சுந்தேரஸ்வரா், மீனாட்சியம்மன், சண்டிகேஸ்வரா், விநாயகா், வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகிய 5 சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக வெள்ளி வாகனங்களில் எழுந்தருளினா். கோயில் ராஜகோபுரம் முன்பாக பஞ்சமூா்த்திகளுக்கு பஞ்ச தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அதைத்தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் முக்கிய வீதிகளில் நகா்வலமாக பக்தா்களுக்கு காட்சியளித்தனா். கோயில் நிா்வாகத்தினா் சாா்பில் பக்தா்களுக்கு அரிசி, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் விபூதி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT