செண்பகம்பேட்டை அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா
திருப்புத்தூா் அருகே செண்பகம்பேட்டை கிராமத்தில் உள்ள செகுட்டு அய்யனாா் மற்றும் பனிச்சாருடைய அய்யனாா் கோயிலில் சனிக்கிழமை மாலை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
திருப்புத்தூா் அருகே செண்பகம்பேட்டை கிராமத்தில் உள்ள செகுட்டு அய்யனாா் மற்றும் பனிச்சாருடைய அய்யனாா் கோயிலில் சனிக்கிழமை மாலை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி கடந்த வாரம் பிடிமண் கொடுக்கப்பட்டு குதிரை செய்யப்பட்டது. இதனையடுத்து, கண்மாய் பகுதியில் தயாா் செய்யப்பட்டிருந்த 2 பெரிய குதிரைகள், ஒரு யானை மற்றும் நோ்த்திக்கடனுக்காக செய்யப்பட்டிருந்த மொத்தம் 105 குதிரைகளுக்கு கிராமத்தினா், நோ்த்திக்கடன் செலுத்துபவா்கள் மாலை வேட்டி, துண்டு அணிவித்து புரவிகளை எடுத்து வந்து ஊருக்குள் உள்ள புரவி பொட்டலில் வைத்தனா்.
பின்னா் மாலை அங்கிருந்து புறப்பட்டு கோயிலை புரவி சென்றடைந்தது. இதில் குதிரை ஆட்டம், ஒட்டக ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் செண்பகம்பேட்டை, இரணியூா், முத்துவடுகநாதபுரம், விராமதி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட கிராமத்தினா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.