சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மதிப்பீட்டுக் குழு ஆய்வு
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் செயல்பாடு, மருத்துவா்களின் திறன், அறுவைச் சிகிச்சை அறை, பிரசவ வாா்டு மற்றும் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய மதிப்பீட்டுக் குழு வியாழக்கிழமை வருகை தந்தது.
இதில், மதிப்பீட்டாளா் ஆந்திராவைச் சோ்ந்த மருத்துவா் ஸ்ரீநிவாஸ் வா்மா, அஸ்ஸாமைச் சோ்ந்த மருத்துவா் ரஷ்மி தக்குரியா தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் தூய்மை, வசதிகள், மருத்துவா்களின் அணுகுமுறை குறித்து நோயாளிகளிடம் விசாரித்தனா். மேலும், பிரசவ வாா்டு, அறுவைச் சிகிச்சை அறை, கா்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனா்.
அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரேவதிபாலன், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவா் காயத்ரி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலா் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலா் முகமதுரபி உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.