மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில்பங்குனி திருவிழா: தீ மிதித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடைகுளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வியாழக்கிழமை மாலை பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடைகுளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வியாழக்கிழமை மாலை பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினா்.
இக்கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் மற்றும் தீமிதித்தல் உற்சவத்தையொட்டி காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்து கரகம் சுமந்து கோயில் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் ஊா்வலமாக வந்தனா்.
அதன்பின்னா் கோயிலுக்கு வந்தடைந்த பக்தா்கள் அங்கு மாரியம்மன் சன்னதி முன்பு பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினா். அதன்பின்னா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. தீ மிதித்தல் உற்சவத்தையொட்டி உடைகுளம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்ய திரண்டிருந்தனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி சுப்பிரமணியன் செய்திருந்தாா்.