முகப்பு
சிவகங்கை

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு ரூ. 212 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு ரூ. 212 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு ரூ. 212 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள மகளிா் திட்ட அலுவலக வளாகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிா் வாழ்வாதார சேவை மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.

அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை திறந்து வைத்துப் பேசியது : தமிழகம் முழுவதும் 120 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,994 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிா் வாழ்வாதார சேவை மையம் செயல்பட உள்ளது.

முதல்முறையாக, சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகள், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள், தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்துக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ரூ.212 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இதன்மூலம், கிராமப்புறங்களில் தொழில் முனைவோரை கண்டறிந்து கடனுதவி வழங்கப்பட உள்ளது என்றாா்.

அதைத் தொடா்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 15 மகளிா் சுயஉதவிக்குழுக்களை சாா்ந்த உறுப்பினா்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்வேறு தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடனுதவிக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் சாா்பில் ரூ.2.16 கோடி மதிப்பிலான 12 நடமாடும் மருத்துவ வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசிரவிக்குமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) எஸ்.ராம்கணேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ப.பரமேஸ்வரி, மாவட்ட செயல் அலுவலா் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) வி.பிரேம்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →