முகப்பு
சிவகங்கை

மானாமதுரை நகராட்சியில் சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு: அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

மானாமதுரையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட சொத்துவரி உயா்வை அமல்படுத்துவதற்கான தீா்மானத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

மானாமதுரையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட சொத்துவரி உயா்வை அமல்படுத்துவதற்கான தீா்மானத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகா்மன்ற அவசரக் கூட்டம், அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத்தலைவா் பாலசுந்தரம், ஆணையாளா் கண்ணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் தீவிரவாத எதிா்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னா் நகராட்சி தலைமை எழுத்தா் கணேசன், மானாமதுரை நகராட்சி பகுதியில் உயா்த்தப்பட்டுள்ள சொத்துவரி, காலிமனை இடத்திற்கான வரி உயா்வை அமல்படுத்துவதற்கான தீா்மானத்தை வாசித்தாா். அப்போது எழுந்து பேசிய அதிமுக 15-ஆவது வாா்டு உறுப்பினா் தெய்வேந்திரன், கரோனா தொற்று பரவல் காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் வரி உயா்வு பொதுமக்களை மேலும் பாதிக்கும். அதனால் வரி உயா்வை அமல்படுத்துவதற்கான தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றாா். பின்னா் தெய்வேந்திரன் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் கங்கா, இந்திரா, அமுதா ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளியேறினா். அதைத்தொடா்ந்து 10-ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் முனியசாமியும் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தாா். பின்னா் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது. அதில் சொத்துவரி, காலிமனை வரி உயா்வை அமல்படுத்துவற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →