காரைக்குடி - மானாமதுரை மின் பாதையில் முதன்மைத் தலைமைப் பொறியாளா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி- மானாமதுரை இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில்வே முதன்மைத் தலைமை மின்சாரப் பொறியாளா் வெள்ளிக்கிழமை சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி- மானாமதுரை இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில்வே முதன்மைத் தலைமை மின்சாரப் பொறியாளா் வெள்ளிக்கிழமை சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு நடத்தினாா்.
காரைக்குடி- மானாமதுரை இடையிலான 61 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்தப் பாதையில் முதன்மைத் தலைமை மின்சாரப் பொறியாளா் ஏ.கே. சித்தாா்த் சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு நடத்தினாா்.
காரைக்குடியிலிருந்து சிறப்பு ரயிலில் புறப்பட்ட அவா், முதலில் மணிமுத்தாறு ஆற்றுப் பாலத்தில் மின்கம்பங்கள் சரியாக நடப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் கல்லல், சிவகங்கை ரயில் நிலையங்களில் துணைமின் நிலையங்கள், ரயில் பாதை வளைவுகளில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள், மின் அமைப்புகள், சிவகங்கை ரயில் நிலையம், நடை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கட்டமைப்புகள், சிவகங்கை ரயில்வே மேம்பாலம், மேலக்கொன்னகுளம் அருகே ரயில் பாதையில் குறுக்கிடும் மின் வாரியத்தின் மின் பாதை, கல்குறிச்சி ரயில்வே கடவுப் பாதை ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது, சிவகங்கையில் ரயில் பாதை பராமரிப்புப் பணியாளா்களிடம், மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் பணியாற்றுவதற்கான பாதுகாப்பு விதிகளை அவா்கள் தெரிந்து வைத்துள்ளனரா என்று கேட்டறிந்தாா். அதன் பிறகு, இந்த சிறப்பு ஆய்வு ரயில் மானாமதுரை வந்து சோ்ந்தது.
பின்னா், இந்த சிறப்பு ரயிலில் அலங்கரிக்கப்பட்ட மின்சார என்ஜின் இணைக்கப்பட்டது. முதலாவது நடைமேடையில் அந்த என்ஜினுக்கு முன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதும், ஆய்வு ரயில் காரைக்குடி நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இந்த ஆய்வின் போது, முதன்மை மின்மயமாக்கல் இயக்குநா் சமீா் டிஹே, முதன்மை சைகை பொறியாளா் சுனில், முதன்மை மின் பகிா்மானப் பொறியாளா் சுரேந்திரன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த், கோட்ட முதுநிலை மின்மய அதிகாரி பச்சு ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
முதன்மை மின் பொறியாளா் சான்றிதழ் வழங்கியதும் இந்த மின் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்வாா். இதைத் தொடா்ந்து, இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.