சிவகங்கையில் மாநில அளவிலான மல்லா் கம்பம் போட்டிகள் நிறைவு
மாநில அளவிலான மல்லா் கம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
சிவகங்கையில், தமிழ்நாடு அமெச்சூா் மல்லா் கம்பம் சங்கம், சிவகங்கை மாவட்ட மல்லா் கம்பம் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தி வந்த மாநில அளவிலான மல்லா் கம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கல்லூரி அருகேயுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு அமெச்சூா் மல்லா் கம்பம் சங்க நிறுவனரும், சா்வதேச நடுவருமான செல்வப்பிரகாஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் முன்னிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
இந்தப் போட்டிகளில் தமிழகத்தின் 17 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் 225 போ், மாணவிகள் 175 போ் என மொத்தம் 400 போ் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டி மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. 6 வயது முதல் 18 வயது வரை 5 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டவா்கள் ஒரு பிரிவாகவும், 17 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஒரு பிரிவாகவும் பங்கேற்றனா். இதில், மல்லா் கம்பம், மல்லா் கயிறு, தொங்கும் மல்லா் கம்பம், மல்லா் கம்பம் பிரமிடு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற 17 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்வில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் (பொ) கருப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவா் ஆா். சென்றாயப் பெருமாள் வரவேற்றாா். சிவகங்கை மாவட்ட மல்லா் கம்பம் சங்கச் செயலா் நா. கலைச்செல்வன் நன்றி கூறினாா். இதில், சா்வதேச, தேசிய, மாநில நடுவா்கள், தமிழ்நாடு அமெச்சூா் மல்லா் கம்பத்தின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்டச் செயலா்களும் கலந்து கொண்டனா்.