சிவகங்கை நகராட்சியில் புதிய பூங்கா: அமைச்சா் திறப்பு
சிவகங்கை நகராட்சியில் புதிய பூங்கா.
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட இந்திரா நகா் பகுதியில் ரூ.37 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கென கூட்டுறவுத்துறை அமைத்தா் கே.ஆா். பெரியகருப்பன் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். அமைச்சா் பெரியகருப்பன் அப்போது பேசியதாவது: தமிழக அரசு, தொலைநோக்கு பாா்வையுடன் பல்வேறு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் தமிழகம் முழுவதும் விரைவாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், வளா்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட 26, 27 வாா்டுகளை உள்ளடக்கிய இந்திரா நகா் பகுதியில், 2024-2025 -ஆம் நிதியாண்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 864 சதுர மீட்டா் பரப்பளவில், ரூ.37 லட்சத்தில் புதிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முழுவதும் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கென திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருக்கும் சுமாா் 3,500 பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து பொழுதுபோக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவா், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் பூங்காவை அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் அமையப்பெற்று, இந்தப் பகுதிக்கு மேலும் சிறப்பு சோ்த்து, இந்தப் பகுதி மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
பூங்காவை இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதுடன், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றாா் அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன்.
இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை நகா் மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், சிவகங்கை நகராட்சி ஆணையா் கி.சு. கிருஷ்ணராம், நகா்மன்ற துணைத் தலைவா் காா்கண்ணன், நகராட்சி பொறியாளா் முத்து, 26-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் மதியழகன் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.