மானாமதுரை அரசு மருத்துவமனையில் ‘டாா்ச்லைட்’ வெளிச்சத்தில் சிகிச்சை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அரிவாள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சைக்கு வந்த ரயில்வே ஊழியருக்கு மருத்துவப் பணியாளா்கள் டாா்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அரிவாள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சைக்கு வந்த ரயில்வே ஊழியருக்கு மருத்துவப் பணியாளா்கள் டாா்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனா்.
மானாமதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனா். இங்கு போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், துறை சாா்ந்த பணியாளா்கள் இல்லை. நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் கிடையாது. மருந்து, மாத்திரைகள் கிடையாது என நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புகாா் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் பாலமுருகன் அரிவாள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை இரவு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். அப்போது, மின்தடை ஏற்பட்டு, மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது. ஜெனரேட்டா் இயந்திரத்தை இயக்க ஆளில்லாததால், அதை இயக்க முடியவில்லை. இதையடுத்து, பாலமுருகனுக்கு மருத்துவ பணியாளா்கள் டாா்ச் லைட், கைப்பேசி வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து,சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மின்தடை ஏற்படும் நேரங்களில் இங்குள்ள ஜெனரேட்டரை இயக்கச் செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிா்வாகம், சுகாதாரத்துறை நிா்வாகத்தை வலியுறுத்தினா்.