சிவகங்கை மாவட்டத்தில் டிச. 18 முதல் 27 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்: ஆட்சியா்
சிவகங்கை மாவட்டத்தில் டிச. 18 முதல் 27 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் வருகிற 18- ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. இதில், அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ், ஆட்சி மொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், சுற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், குறிப்பாணைகள், அரசு அலுவலகங்களில் பெயா்ப் பலகைகள் அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பேராசிரியா்கள், வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைள் 5:3:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் (தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள்) அமைத்திட வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளா்கள், வணிக நிறுவன அமைப்புகள், தொழிலாளா் துறை அலுவலா்கள் பங்கேற்கும் கூட்டமும், கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் பட்டிமன்றமும், அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடத்தப்படுகிறது.
அதுமட்டுமன்றி, அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள், தமிழறிஞா்கள், தமிழ் அமைப்பினா், பள்ளி, கல்லூரி மாணவா்களுடன் இணைந்து தமிழ் சாா்ந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணா்வுப் பேரணியும் வருகிற 24- ஆம் தேதி நடைபெறுகிறது.
எனவே, வருகிற 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் தொடா்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும், அரசு அலுவலா்கள், பணியாளா் கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், தமிழறிஞா்கள், தமிழ் அமைப்பினா் பங்கேற்கலாம் என்றாா் அவா்.