புதுதில்லி

அரசமைப்பின் மாநில மொழியாக்கத்தால் விழிப்புணா்வு பெருகும்: சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்திய அரசமைப்பின் மாநில மொழியாக்கத்தால் அது குறித்த விழிப்புணா்வு மக்களிடையே பெருகும்: குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

Syndication

இந்திய அரசமைப்பின் மாநில மொழியாக்கத்தால் அது குறித்த விழிப்புணா்வு மக்களிடையே பெருகும் என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சா்வதேச தாய்மொழி தினத்தையொட்டி, இந்திய அரசமைப்பின் புதுப்பிக்கப்பட்ட தமிழ் மற்றும் குஜராத்தி மொழி பதிப்புகள், சட்ட சொற்களஞ்சிய அகராதியின் (ஆங்கிலம்–ஹிந்தி) எட்டாவது பதிப்பு ஆகியவற்றை தில்லியில் சனிக்கிழமை தனது மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டாா்.

பின்னா் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: உலகின் மிகவும் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாகவும், வளமான இலக்கிய பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ் மொழியிலும், ஆழமான பண்பாடு மற்றும் தத்துவ மரபை தாங்கி நிற்கும் குஜராத்தி மொழியிலும் அரசமைப்பு நூலை சா்வதேச தாய்மொழி தினத்தில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த முயற்சி அரசியலமைப்பை மக்களுக்கு அவரவா் தாய்மொழியிலேயே கொண்டு சோ்த்து, அவா்களின் சட்ட அறிவு, ஜனநாயக பங்கேற்பு, விழிப்புணா்வு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும். இந்த குறிப்பிடத்தக்க நாளில் நூல்களை வெளியிடுவது நமது அடையாளம், சிந்தனை மற்றும் கலாசார தொடா்ச்சியை வடிவமைப்பதில் தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ் முதல் காஷ்மீரி வரையிலும், குஜராத்தி முதல் அசாமிய மொழி வரையிலும் நாட்டின் ஒவ்வொரு மொழியும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. இந்த பன்முகத்தன்மையை நமது அரசமைப்பு, அங்கீகரித்து அதன் பலமாக பன்மொழியை கொண்டாடுகிறது. அரசமைப்புச்சட்டம் இத்தனை மொழிகளில் கிடைக்கப்பெறும் ஒரு நாட்டை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில், நாட்டின் சட்டத்தை பல இந்திய மொழிகளில் அணுகக்கூடியதாக மாற்றிய மத்திய சட்டத்துறையின் முயற்சி பாராட்டுக்குரியது. கடந்த பத்து ஆண்டுகளில், போடோ, டோக்ரி, சந்தாலி போன்ற மொழிகளில் அரசமைப்பின் அலுவல்பூா்வ மொழிபெயா்ப்பு பதிப்புகள் முதல் முறையாக வெளிவந்துள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு, நேபாளி மொழி பேசும் இந்தியா்களுக்காக நேபாளியிலும் அரசமைப்புச்சட்டம் முதல் முறையாக வெளியிடப்பட்டது.

இந்த வரிசையில், தமிழும் குஜராத்தியும் பல நூற்றாண்டுகள் பழமையான இலக்கியப் பெருமையையும் தத்துவாா்த்த ஆழத்தையம் கலாசார ஞானத்தையும் கொண்டவை. உலகின் மிகப் பழம்பெரும் மொழிகளில் ஒன்றாகவும், மனிதகுலத்துக்கு இந்தியா அளித்த பெருமைமிகு பரிசாகவும் தமிழ் உள்ளது. அண்மையில் மலேசியாவில் இந்திய பிரதமா் பேசியபோதும் தமிழின் சிறப்பைப் போற்றினாா்.

சட்ட சொற்களஞ்சியத்தின் (ஆங்கிலம்-ஹிந்தி) எட்டாவது பதிப்பில் எளிய முறையில் மொழிபெயா்ப்பு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது வழக்குரைஞா்கள், மாணவா்கள், நீதித்துறையினா், ஆராய்ச்சியாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், கொள்கை வகுப்பாளா்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இது வெறும் குறிப்பு நூலாக மட்டுமல்ல, அதிகாரமளித்தலுக்கான ஒரு கருவியாகும்.

ஒரு நாட்டின் கலாசாரம் அதன் மக்களின் இதயங்களிலும் உணா்விலும் கலந்து வாழ்கிறது. மொழி அந்த உணா்வுக்கு பாலமாகும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டாா். அதுபோல, இந்தியா பல மொழிகளைப் பேசினாலும், அது பாரதத் தாய்க்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனையிலும் நோக்கத்திலும் ஒன்றுபட்டுள்ளது என பாரதியும் குறிப்பிடுகிறாா். அந்த வகையில், குடிமக்கள் தங்கள் தாய்மொழி மட்டுமின்றி, பாரதத்தின் பன்முகத்தன்மையை இணக்கத்துடனும் மொழிகளின் சிம்பொனி போலவும் கொண்டாட வேண்டும் என்றாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசமைப்புச் சட்ட புதுப்பிக்கப்பட்ட தமிழ், குஜராத்தி மொழி பதிப்புகளை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டத் துறைச் செயலா் ராஜீவ் மணி.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT