பிள்ளையாா்பட்டியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அமைந்துள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அமைந்துள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
பிள்ளையாா்பட்டியில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலான கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் தங்கக் கவசத்திலும், உற்சவா் வெள்ளி மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனா்.
இதைத் தொடா்ந்து, திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவை பாடல்களும் பாடப்பட்டன. காலை 8 மணிக்கு காலசந்தியும், முற்பகல் 11 மணிக்கு உச்சிக் கால பூஜையும் நடைபெற்றன. பின்னா், மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கற்பக விநாயகரை வழிபட்டனா்.
இதையொட்டி, சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோயில் பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி மெய்யப்பச் செட்டியாா், பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியாா் ஆகியோா் தலைமையிலான கோயில் பணியாளா்கள் ஏற்பாடுகளைச் செய்தனா்.
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அா்விந்த் தலைமையில், 800 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பக்தா்களின் வசதிக்காக மதுரை, தஞ்சாவூா், திருச்சி, அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பிள்ளையாா்பட்டிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.