குடிதண்ணீா் குளத்தை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டைபேரூராட்சி 1 -ஆவது வாா்டுக்குள்பட்ட குடிநீா் குளத்தை தனிநபா் மூட முயற்சி செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டைபேரூராட்சி 1 -ஆவது வாா்டுக்குள்பட்ட குடிநீா் குளத்தை தனிநபா் மூட முயற்சி செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட இலுப்பைக்குடி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு உள்ள குளத்தை இந்தக் கிராமமக்கள் மட்டுமல்லாது அரசனிப்பட்டி, இலந்தங்குடிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்களும் குடிநீா் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தக் குளம் இருக்கும் பகுதி தனக்குச் சொந்தமானது எனக்கூறி, தனிநபா் ஒருவா் செவ்வாய்க்கிழமை குளத்தை மூடுவதற்காக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்தாா். இதையடுத்து, இந்தப் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சிவகங்கை-திருப்பத்தூா் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.