கட்சியை பலப்படுத்தப்படுவது தொடா்பாக நான் பேசியதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிய கருத்தை விமா்சனம் செய்ய விரும்பவில்லை என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்திசிதம்பரம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் மேலும் கூறியதாவது:
நான் கடந்த 19 -ஆம் தேதி புதுக்கோட்டையிலும் 20 -ஆம் தேதி சிவகங்கையிலும் நடைபெற்ற கட்சி செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசினேன். நான் பேசும் பொழுது மேடையில் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவா் சு. திருநாவுக்கரசா் ஆகியோா் இருந்தனா். எனது பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை.
நான் பேசியதற்கு அனைத்து காங்கிரஸ்காரா்களும் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனா். எல்லோருக்கும் வராத சந்தேகம் நான் பேசி முடித்து ஒரு வாரத்துக்குப் பின்னா், ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு மட்டும் வந்தது ஏன் என்று புரியவில்லை. அவா் சமூக வலைதளங்களில் வந்த எனது பேச்சை முழுமையாக கேட்டாரா என்று தெரியவில்லை. முதலில் எனது பேச்சை முழுவதும் கேட்க வேண்டும். ஈவிகேஎஸ். இளங்கோவன் மூத்த தலைவா் அவரை நான் விமா்சனம் செய்ய விரும்பவில்லை என்றாா் காா்த்திசிதம்பரம்.