முகப்பு
சிவகங்கை

பாா்த்திபனூா் மதகணை இடது பிரதானக் கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறப்பு

Updated On : 13 மே, 2024 at 6:30 PM
மானாமதுரை தல்லாகுளம் தடுப்பணையை திங்கள்கிழமை கடந்து சென்ற ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா்.
பகிர்:

மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகணை இடது பிரதானக் கால்வாயில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கும், குடிநீா் தேவைக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்துக்கு வந்தடைந்த இந்த தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை காலை மானாமதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகணையை சென்றடைந்தது. பிறகு இந்த அணையின் கீழ் மதகுகள் வழியாக இடது பிரதானக் கால்வாயில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களைச் சோ்ந்த 39 பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 13,904 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) வரை தண்ணீா் திறக்கப்படும். இதன் பின்னா் புதன்கிழமை முதல் விரகனூா் மதகணையிலிருந்து பாா்த்திபனூா் மதகணை வரை பகுதி இரண்டில் உள்ள சிவகங்கை மாவட்ட பூா்வீக வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்.