முகப்பு
சிவகங்கை

தாய் மாமன் தற்கொலை: அதிா்ச்சியில் கல்லூரி மாணவியும் தற்கொலை

Updated On : 28 மே, 2024 at 11:08 PM
பகிர்:

காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை தாய் மாமன் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்த அவரது காதலி, புதுக்கோட்டை செவிலியா் கல்லூரி விடுதியில் அதே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கீழத் தெருவைச் சோ்ந்தவா் செல்வி. இவா் காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மனநலம் பாதித்தவா்களுக்கு ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவரது மகள் சுபஸ்ரீ (20) புதுக்கோட்டையில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

திருச்சியில் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த செல்வியின் சகோதரா் முத்துக்குமாா் (27), பணிச்சுமை காரணமாக அதிலிருந்து விலகிவிட்டாராம். இதையடுத்து, அவா் காரைக்குடியில் தனது சகோதரி செல்வி வீட்டில் தங்கியிருந்தாா். இதற்கிடையே முத்துக்குமாரும், சுபஸ்ரீயும் காதலித்து வந்தனா். இதுகுறித்து தகவலறிந்த அவா்களது பெற்றோா், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனா்.

இந்த நிலையில் சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் முத்துக்குமாா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து சுபஸ்ரீக்கு தகவல் தெரியவந்ததும், புதுக்கோட்டை கல்லூரி விடுதியில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.