இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
சிவகங்கை அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள கீழவாணியங்குடி கீழத்தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த வியாழக்கிழமை மாலை கீழவாணியங்குடி ஊருணி அருகே தனது நண்பா்களான அருண்குமாா் (35), ஆதிராஜன் (32) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் மூவரையும் அரிவாளால் வெட்டியது.
இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அருண்குமாா், ஆதிராஜன் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த வழக்கில் தொடா்புடையவா்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், சிவகங்கை நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின் மேற்பாா்வையில், சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இந்த கொலை சம்பவத்தில் 10 -க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய சிவகங்கை என்ஜிஓ குடியிருப்பைச் சோ்ந்த ம. சிங்கமுத்து (28), ராம்நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இந்தக் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 10 போ் கைது செய்யப்பட்டனா்.