மானாமதுரை வாரச் சந்தையில் சாலையோர கடைகளுக்கு தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வாரச்சந்தையில் சாலையோரங்களில் கடைகள் அமைக்க போலீஸாா் தடை விதித்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வாரச்சந்தையில் சாலையோரங்களில் கடைகள் அமைக்க போலீஸாா் தடை விதித்தனா்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அப்போது, சந்தைக்கு வெளியே சுந்தரபுரம் கடை வீதியிலிருந்து வாரச்சந்தை நுழைவுப் பகுதி வரையிலும், தாயமங்கலம் சாலையிலும் சாலையோரங்களில் அமைக்கப்படும் கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் மா்ம நபா்கள் பணம், நகை
உள்ளிட்டவற்றை திருடிச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி. நிரேஷ் வாரசந்தை தினத்தில் சந்தை கட்டட வளாகத்தின் வெளியேயும், சாலையோரங்களிலும் வியாபாரிகள் கடைகள் அமைக்கத் தடை விதித்தாா்.
மேலும், சந்தை வளாகத்துக்குள் கடைக்கள் அமைத்து வியாபாரம் செய்ய வியாபாரிகளிடம் போலீஸாா் அறிவுறுத்தினா்.
போக்குவரத்து போலீஸாரும் இங்கு முகாமிட்டு சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்படாமல் கண்காணித்தனா். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் சுந்தரபுரம் வீதி, தாயமங்கலம் சாலை, வாரச்சந்தை நுழைவுப் பகுதி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் வாகனங்கள் சீராகச் சென்று வந்தன.
ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை நாள்களில் போலீஸாா் இது போன்ற நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரங்களில் கடைகள் அமைக்காமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.