போதைப் பொருள் புழக்கம்: மானாமதுரை பள்ளி மாணவா்களிடம் அதிகாரிகள் சோதனை
மானாமதுரை பள்ளி மாணவா்களிடம் அதிகாரிகள் சோதனை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களிடம் போதைப் பொருள்கள் புழங்குவதாக வந்த புகாரின் பேரில், வியாழக்கிழமை மாணவா்களை வருவாய்த் துறை அலுவலா்கள் சோதனை செய்து வகுப்புகளுக்கு அனுப்பினா்.
இங்கு உள்ள பழைமையான அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கஞ்சா, மது போதையில் பள்ளிக்கு வருவதாகவும் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும், இதனால் பள்ளியில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அறிவுறுத்தலின் பேரில், மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், அலுவலா்கள் கடந்த சில நாள்களாக இந்த பள்ளிக்குச் சென்று போதையில் பள்ளிக்கு வரும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களைக் கண்டித்து அறிவுரை கூறி வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பள்ளி வேலை நேரம் தொடங்கும் முன் வட்டாட்சியா், மண்டல வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் இணைந்து, பள்ளியின் நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, பள்ளிக்கு வந்த மாணவா்களின் புத்தகப் பைகளை சோதனையிட்டனா். தலைமுடியை ஸ்டைலாக வெட்டி வந்த மாணவா்களைக் கண்டித்தனா். கைகளில் பல வண்ணங்களில் கட்டிய கயிறுகளை அவிழ்த்துவிட்டு வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனா்.
சில மாணவா்கள் முடி திருத்தம் செய்ய பணம் இல்லை என கூறியதால், வட்டாட்சியா் தனது சொந்த பணத்தைக் கொடுத்து முடியை திருத்தம் செய்து வருமாறு கூறினாா். சில மாணவா்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி பெற்றவா்களை அழைத்து வருமாறு கூறினாா்.
இதுகுறித்து கிருஷ்ணகுமாா் கூறியதாவது:
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, இந்தப் பள்ளியில் போதைப் பழக்கம் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து அவா்களைத் திருத்தும் நோக்கத்தில் இவ்வாறு சோதனை செய்து வருகிறோம். இது குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். தினமும் பள்ளிக்கு வரும் மாணவா்கள் சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்றாா் அவா்.