மயான இடத்தில் சாலை அமைக்க எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் சாலை அமைக்க மயான இடத்தை பயன்படுத்த கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை வட்டாட்சியரிடம் மனுக் கொடுத்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே லாடனேந்தல் - பெத்தானேந்தல் இடையே அமைக்கப்பட்டு வரும் உயா்நிலை பாலத்துக்கு இணைப்புச் சாலை அமைக்க மயான இடத்தை பயன்படுத்த கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை வட்டாட்சியரிடம் மனுக் கொடுத்தனா்.
லாடனேந்தல் -பெத்தானேந்தல் இடையே வைகையாற்றில் குறுக்கே ரூ.19 கோடியில் நபாா்டு வங்கி கடனுதவித் திட்டத்தில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் லாடனேந்தல் பிரதான சாலையிலிருந்து பாலத்துடன் இணைக்கப்படவுள்ள சாலைக்கு அருகேயுள்ள மயானத்துக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த முடிவு செய்து சாலை அமைப்பதற்கான முன்கட்டப் பணி நடைபெற்றது.
லாடனேந்தல் பகுதி மக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை பணியைத் தடுத்து நிறுத்தினா். இந்த நிலையில் இது தொடா்பாக திருப்புவனம் வட்டாட்சியரிடமும் இவா்கள் மனுக் கொடுத்தனா். எதிா்ப்பை மீறி மயான இடத்தில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டால் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக லாடனேந்தல் மக்கள் தெரிவித்தனா்.